பாராளுமன்றத்தில் எதிர்கட்சி புதுமுகங்கள் அதிக சிறப்பாக செயலாற்றுகின்றனர்

by manthri.lk - Research Team posted over 8 years ago in ஆய்வறிக்கை

 

தற்போது பாராளுமன்றத்தில் இருக்கின்ற 225 உறுப்பினர்களில் 87 பேர் (39%) புதியவர்கள் -அதாவது முதல் தடவை பாராளுமன்றத்திற்கு வந்துள்ளவர்கள் ஆவர். இவர்கள் எந்தத் தரப்பைச் சார்ந்தவர்கள் மற்றும் அவர்களுடைய செயற்பாடு எவ்வாறு உள்ளது என்பதைப் பார்ப்போம்.   

பெரும்பாண்மையான புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியைச் சேர்ந்தவர்களே: இவர்களில் கிட்டத்தட்ட நான்கில் மூன்று வீதம், அதாவது 62 புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியைச் சேர்ந்தவர்களே. எஞ்சியவர்களில் 20 உறுப்பினர்கள் ஐக்கிய தேசிய முன்னணியைச் சேர்ந்தவர்கள் ஆவதோடு 4 புதிய உறுப்பினர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பையும், ஒருவர் ஜனநாயக தேசிய கூட்டமைப்பையும் சேர்ந்தவர் ஆவார்.  

ஐக்கிய தேசிய முன்னணியினர் ஏனையோரை மிஞ்சுகின்றனர்: பொதுவாக, சிறப்பான விதத்தில் பிரதிநிதித்துவம் செய்யும் குழுக்களால் பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக செயற்படுவதற்கு அதிக சாத்தியப்பாடு உள்ளது. இருந்தாலும், பாராளுமன்றத்தில் உள்ளவர்களின் செயற்பாடுகளை அவதானித்து, அவர்களை தரவரிசைப்படுத்தி வரும் முன்னோடி இணைத்தள முன்னெடுப்பொன்றாகிய Manthri.lk யின் கருத்துப்படி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் புதுமுகங்கள் எண்ணிக்கையால் அதிகமானவர்களாக இருந்தாலும் எதிர்கட்சியில் உள்ள ஐக்கிய தேசிய முன்னயின் புதுமுகங்களுடன் ஒப்பிடுகையில், அவர்கள் முத்திரை பதிக்கும் விதத்தில் செயற்படுவதில்லை. 2012 மே முதல் 2014 ஆகஸ்டு மாதம் வரை Manthri.lk சேகரித்து வந்த தரவுகளின் அடிப்படையில் ஒரு ஐக்கிய தேசிய முன்னணி புதுமுகம், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி புதுமுகத்தை விட நான்கு மடங்கு பங்களிப்பை பாராளுமன்றத்திற்கு செய்துள்ளார். இதே வேளை, ஜனாநயக தேசிய முன்னணயின் ஒரே ஒரு உறுப்பினர் மிக மிக சொற்பமாகவே பங்களிப்பு செய்தார்.

                            

எதிர்கட்சியில் இருந்தவாறு அதிக சிறப்பாக செயலாற்றுதல்: தரவரிசைப்படி அதிக சிறப்பாக செலாற்றிய முதல் 5 புதுமுக பாராளுமன்ற உறுப்பினர்களும் ஐக்கிய தேசிய முன்னணியைச் சேர்ந்தவர்களே. இவர்களில் ஏறத்தாழ 12,000 நிமிடங்களை பாராளுமன்றத்திற்கு பங்களிப்பு செய்த அஜித் பெரேரா முதலாவதாக திகழ்கின்றார். இவரைத் தொடர்ந்து புத்திக பதிரன, சுஜீவ சேனசிங்ஹ, ஹர்~ டி சில்வா மற்றும் எரான் விக்ரமரத்ன முறையே அடுத்த நான்கு இடங்களில் உள்ளனர். (அட்டவணை 2)

                           

இதே வேளை, செயற்பாடு மிகவும் குறைந்த 10 பாராளுமன்ற உறுப்பினர்களில் 9 பேருமே ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியைச் செர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

புதுமுகங்களுக்கு உள்ள வாய்ப்புக்கள்: தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் பழைய பாராளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாட்டு சராசரியை விட 88 புதுமுகங்களில் 14 பேர் அதிக சிறப்பாக இயங்கி வருகின்றனர். இதை நோக்கும் போது, கட்சிகளின் தலைமைத்துவம் புதுமுகங்களுக்கு முன்னுரிமை வழங்காமல் இருக்கும் சாத்தியம் உள்ள போதிலும், புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்காலத்தில் வெற்றிகரமாக இயங்க முடியும் என்பது நிச்சயம்.  

அது சரி, புதுமுகங்கள் எவ்வாறு பாராளுமன்றத்தில் பங்களிப்பு செய்ய முடியும்? புதிய வாய்ப்புக்களை தாங்களே உருவாக்குவதன் மூலம் இதை அவர்கள் செய்யலாம். ஒத்திவைப்புத் பிரேரனைகள், எழுதப்பட்டக் கேள்விகள், ஒழுங்குப் பிரேரனைகள் போன்ற விடயங்களில் புதுமுகங்கள் ஒப்பீட்டு அளவில் கட்சித் தலைமைகளை விட அதிகப் பங்களிப்பை வழங்குகின்றனர். இதே வேளை, கட்சித் தலைமைகளின் பங்களிப்பு அதிகம் தேவையான  பிரேரனைகள் தொடர்பான விவாதங்களிலும் புதுமுகங்களின் பங்களிப்பு குறிப்பிடுமளவு அதிகமாக இருப்பது புலனாகியுள்ளது.  

                           

 
                  

ஐக்கிய தேசிய முன்னணியின் புதிய பாராளுமன்ற உறுப்பினர்களின் இந்த அதிக பங்களிப்பு எதை காட்டுகின்றது? இவர்கள் ஏனயவர்களை விட அதிக ஆற்றல் உள்ளவர்களா? அல்லது, தமது புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஐக்கிய தேசிய முன்னணி அதிக சந்தர்ப்பத்தை வழங்குகின்றதா? அதே போல ஆளும் தரப்பில் உள்ள புதியவர்களுக்கு அரசாங்கம் தரும் வாய்ப்புக்கள் போதாதா? தயவு செய்து உங்கள் கருத்துக்களை www.manthri.lk/en/blog என்ற இணையப்பக்கத்திற்கோ அல்லது 071-4639882 என்ற இலக்கத்திற்கு குறுஞ்செய்தியொன்றை அனுப்புவதன் மூலமோ Manthri.lk வுடன் பகிர்ந்து கொள்ளலாமே?    


 


comments powered by Disqus